வியாபாரியிடம் ரூ.6 கோடி தங்க நகை மோசடி
வியாபாரியிடம் ரூ.6 கோடி தங்க நகைகள் மோசடி செய்த மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வியாபாரியிடம் ரூ.6 கோடி தங்க நகைகள் மோசடி செய்த மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெங்களூரு வியாபாரி
பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டை சேர்ந்தவர் ஷாகன்லால் சாத்ரி (வயது 60). நகை மொத்த வியாபாரி. இவர் பெங்களூருவில் அன்மோல் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 25 ஆண்டுகளாக தங்க நகை ஆபரணங்களை தயாரித்து தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் சென்று விற்பனை செய்து வருகிறார். கோவையில் உள்ள பல நகைக்கடைகளுக்கு அவரது கடையில் இருந்து நகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
15½ கிலோ நகைகள்
கோவைக்கு அனுப்பப்படும் நகைகளில் மீதமுள்ள விற்காத மற்றும் விரும்பாத மாடல் நகைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் பெங்களூருவில் உள்ள ஷாகன்லால் சாத்ரி நகைக்கடைக்கு திரும்ப அனுப்பப்பட்டு வந்தது.
இந்த பணிகளை அவரது நகை கடையில் மார்க்கெட்டிங் பிரிவில் மேலாளராக பணியாற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹனுமான் திவேஷி (45) என்பவர் கவனித்து வந்தார். கடந்த 10.8.2022 முதல் 12.9.2022 வரை கோவை வெறைட்டிஹால் பகுதியில் உள்ள நகை கடைகளில் விற்பனை செய்த நகைகள் போக மீதமுள்ள 15 கிலோ 447 கிராம் தங்க நகைகள் லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் ஷாகன்லால் சாத்ரி கடைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
ரூ.6 கோடி மோசடி
ஆனால் மார்க்கெட்டிங் மேலாளர் ஹனுமன் திவேஷி 1 கிலோ 867 கிராம் தங்கத்தை மட்டுமே ஒப்படைத்து விட்டு மீதமுள்ள ரூ.6 கோடி மதிப்பிலான 13 கிலோ 580 கிராம் தங்க நகைகளை முறைப்படி கணக்கில் காட்டாமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து ஷாகன்லால் சாத்ரி மார்க்கெட்டிங் மேலாளரிடம் கேட்ட போது அவர் முறையான பதில் அளிக்கவில்லை.
எனவே இந்த மோசடி சம்பவம் தொடர்பாக ஷாகன்லால் சாத்ரி கோவை வெறைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மார்க்கெட்டிங் மேலாளர் ஹனுமான் திவேஷி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.