ரூ.5,855 கோடியில் அமைகிறது: மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைக்கு மத்திய அரசு அனுமதி

ரூ.5,855 கோடியில் அமைய உள்ள சென்னை மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து உள்ளது. 2½ ஆண்டுகளில் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Update: 2023-02-03 00:19 GMT

சென்னை,

கார் தொழிற்சாலை, மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை என பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ளன.இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் சென்னை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சென்னை துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்து தங்கு தடையின்றி நடந்திட தொழில் ஏற்றுமதி மேம்பாட்டை கருத்தில் கொண்டு சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது.

தி.மு.க. ஆட்சியில் அறிவிப்பு

இதைத்தொடர்ந்து சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே 20.56 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்கப்படும் என கடந்த 2006-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி அறிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்துக்கு அப்போது ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் சென்னையில் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதன்பின்பு துரிதமாக வேலை தொடங்கப்பட்டு கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட்டன.

கைவிடப்பட்டது

ஆனால் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் கைவிடப்பட்டது. கூவம் ஆற்றின் நீர்ப்பகுதியில் தூண்கள் அமைக்கப்படுவதால் மழைக்காலங்களில் நீர் செல்வதற்கு இடையூறு ஏற்படும் என கூறி இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது இந்த திட்டம் ரூ.5,855 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 16.5.2022 அன்று கையெழுத்தானது.

தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஈரடுக்கு பாலம்

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மே 26-ந் தேதி இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கிவைத்தார். ஒரே பாலமாக அமைக்கப்பட இருந்த இந்த திட்டம் ஈரடுக்கு பாலமாக அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக நீண்ட தூரத்தில் இந்த பாலம் 4 வழிச்சாலையை கொண்ட ஈரடுக்கு பாலமாக அமைய இருக்கிறது.

முதல் அடுக்கில் பஸ்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்கும் வகையில் சில இடங்களில் இறங்கவும், ஏறவும் அணுகு சாலையுடனும், இரண்டாம் அடுக்கில் துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு எங்கும் நிற்காமல் செல்லும் வகையிலும் சாலை அமைய உள்ளது. இரண்டாம் அடுக்கில் லாரிகள் மட்டுமே செல்லும்.

சிவானந்தா சாலையில் தொடங்கும் இந்த ஈரடுக்கு பாலம் சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயல் சென்றடைகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 604 தூண்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் 375 தூண்கள் கூவம் ஆற்றிலும், 210 தூண்கள் கடலோர மண்டல மேலாண்மை பகுதிக்குள்ளும் அமைகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளது.

மத்திய அரசு அனுமதி

இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் குழு தற்போது அனுமதி அளித்து உள்ளது. உயர்மட்ட பாலத்திற்காக எழுப்பப்படும் தூண்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்கு தடை ஏற்படக்கூடாது என்றும், பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்புகள், பணிகள் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து உள்ளது.

கட்டுமானத்தின்போது அகற்றப்படும் கழிவுகளை நீர்நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்டக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கி மத்திய அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பறக்கும் சாலை எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடிகிறது, எந்தெந்த வழியாக செல்கிறது, எந்தெந்த இடங்களில் அணுகு சாலைகள் அமைக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து முப்பரிமாண வீடியோவாக மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

சுற்றுச்சூழல் நிபுணர் குழுவின் நிபந்தனைகளுடன் விரைவில் பணியை தொடங்கி அடுத்த 2½ ஆண்டுகளுக்குள் பணியை முடிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்