பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று ஆசைகாட்டி ரூ.47½ லட்சம் மோசடி
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று ஆசைகாட்டி ரூ.47½ லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று ஆசைகாட்டி ரூ.47½ லட்சம் மோசடி செய்ததாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகம்
திருச்சி ஏர்போர்ட் காவிரி நகரைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 60). இவரை கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள பங்கு நிறுவனத்தில் பணியாற்றும் ஹரிகரசுதன் என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, அவர் ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனத்தில் 5 குழுக்களில் தலா ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் இரட்டிப்பு தொகை கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சகாதேவன் ரூ.26 லட்சத்து 11 ஆயிரத்தை ஹரிகரசுதனுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.
ரூ.47½ லட்சம் மோசடி
பின்னர் குறிப்பிட்ட திட்டத்தின் முதிர்வு காலம் முடியும் முன்பே, ஹரிகரசுதன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மினோன்சி, சமீர்பாட்சா, மாரியப்பன் ஆகியோர், அந்த தொகையை மற்றொரு நிறுவனத்தில் ஒரு மாதத்தில் இரட்டிப்பாக்கும் திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பின்பு அவர்கள் கொடுக்க வேண்டிய ரூ.47 லட்சத்து 73 ஆயிரத்தை சகாதேவனுக்கு கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் திருச்சி 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் சகாதேவனிடம் ரூ.47 லட்சத்து 73 ஆயிரத்தை மோசடி செய்ததாக ஹரிகரசுதன், மினோன்சி, சமீர்பாட்சா, மாரியப்பன் ஆகியோர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.