முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.4½ லட்சம் மோசடி

முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.4½ லட்சம் மோசடி

Update: 2023-02-04 18:45 GMT

கோவை

50 டன் வெங்காயம் அனுப்புவதாக கூறி கோவையில் முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த மராட்டியத்தை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

முன்னாள் ராணுவ வீரர்

கோவை சவுரிபாளையம் மீனா எஸ்டேட் 1-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் நடராஜன் (வயது 57). முன்னாள் ராணுவ வீரர். இவர் ஓய்வு பெற்றதை தொடா்ந்து சொந்தமாக காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் தொழில் தொடங்க முடிவு செய்தார்.

இதுதொடர்பாக அவர் யாரை அணுக வேண்டும் என்று தெரியாததால் இதுகுறித்து அவர் ஆன்லைனில் சொந்த தொழில் தொடங்க உள்ளதாக விளம்பரப்படுத்தினார். அந்த விளம்பரத்தை மராட்டிய மாநிலம் ஹமத் நகரை சேர்ந்த சாகர் சிபேட், அனுபா அமித் குமார், கணேஷ் டிரும்பாகே தோலே ஆகியோர் பாா்த்து உள்ளனர்.

ரூ.4½ லட்சம் மோசடி

இதையடுத்து அவர்கள் நடராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு தாங்கள் மராட்டியத்தில் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வருவதாகவும், எங்களிடம் டன் கணக்கில் வெங்காயம் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அதனை வேன் மூலம் அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இதை உண்மை என்று நம்பிய நடராஜன் அவர்களிடம் இருந்து 50 டன் வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து அவர் சாகர் சிபேட்டை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது வெங்காயம் அனுப்பிவைக்க ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை அனுபா அமித் குமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கூறினார். இதைத்தொடர்ந்து நடராஜன் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி வைத்ததாக தெரிகிறது. ஆனால் அதன் பின்னர் அவர்கள் குறிப்பிட்டவாறு வெங்காயத்தை அனுப்பி வைக்கவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த நடராஜன் அதிர்ச்சியடைந்தார்.

3 பேர் மீது வழக்கு

பின்னர் அவர் இகுதுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சாகர் சிபேட், அனுபா அமித் குமார், கணேஷ் டிரும்பாகே தோலே ஆகியோர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்