தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி

தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக குறைதீர்வு கூட்டத்தில் சகோதரிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

Update: 2023-05-29 17:08 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 341 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

பஞ்சமி நிலம்

கூட்டத்தில் அணைக்கட்டு தாலுகா கந்தனேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் விவசாய கூலிவேலை செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட 27 ஏக்கர் பஞ்சமி நிலம் பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி காணப்படுகிறது. ஆதிதிராவிட மக்களை தவிர வேறு நபர்களின் பெயரில் இருந்தால் அந்த இடத்தை மீட்டு சொந்த வீடு, நிலம் இல்லாமல் வாழும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் 3 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே பஞ்சமி நிலத்தை மீட்டு எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ரூ.4 லட்சம் மோசடி

விருதம்பட்டு வெண்மணி மோட்டூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் அமராவதி, சாவித்ரி ஆகியோர் அளித்த மனுவில், நாங்கள் சுமார் 30 ஆண்டுகளாக வீட்டுவேலைகள் செய்து ரூ.4 லட்சம் சேமித்து வைத்திருந்தோம். எங்களுக்கு திருமணம் ஆகவில்லை. எங்களது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். அவர் கடந்த 2020-ம் ஆண்டு ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் கேட்டார். நாங்கள் ரூ.4 லட்சம் கொடுத்தோம். 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வேலை வாங்கி தராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்து வருகிறார். பணத்தை கேட்டால் கணவன்-மனைவியும் மிரட்டல் விடுக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் காட்பாடி ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் புதிதாக அங்காளம்மன் கோவில் கட்டினோம். இதற்கு மற்றொரு தரப்பினர் சொந்தம் கொண்டாட நினைக்கின்றனர். 4 கோவில்களில் தர்மகர்த்தாவாக இருக்கும் நபர் எங்கள் கோவிலுக்கும் தர்மகர்த்தாவாக இருக்க நினைக்கிறார். கோவிலை நாங்கள் மற்றொரு தரப்பினரிடம் கொடுக்க மறுத்ததால் 6 குடும்பங்களையும் ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்