கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி - கலெக்டர் அனிஷ்சேகர் தகவல்

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-16 20:37 GMT


கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இணையதளத்தில் பதிவு

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக் கொள்ள நிதி உதவி வழங்கப்படும். அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெறுவதற்கு ரூ.4 லட்சம் நிதி வழங்கப்படும். அதில் பயன்பெற www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

வீட்டுமனை பட்டா

இந்த வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, 3 வருடங்கள் தொடர்ந்து புதுப்பித்தல் செய்து இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளன்று பதிவு புதுப்பித்தல் நடப்பில் இருக்க வேண்டும். சொந்தமாக வீடு கட்டுதல் திட்டத்தின்கீழ் பயனடைய கட்டுமானத் தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தினருக்கு வேறு எங்கும் கான்கீரிட் வீடுகள் இருக்கக் கூடாது. அவர் அரசின் வேறு வீட்டுவசதி திட்டத்தின்கீழ் பயனடைந்தவராக இருக்க கூடாது. கட்டுமான தொழிலாளியின் தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

சொந்த இடத்தில் வீடு கட்டுவோர் என்றால், சரியான அளவீட்டில் குறைந்தது 300 சதுர அடி வீட்டுமனை இருக்க வேண்டும். தொழிலாளியின் பெயரில் உள்ள வீட்டுமனை பட்டா அல்லது கட்டுமானத் தொழிலாளி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் பெயர்களில் உள்ள கூட்டுப்பட்டாவாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்