சென்னை விமான நிலையத்தில் ரூ.37¾ லட்சம் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சிங்கப்பூர் பயணிகளிடமிருந்து ரூ.37¾ லட்சம் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-29 22:43 GMT

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணியான சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து ரூ.25 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள 541 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வாலிபரை கைது செய்து, கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க டாலர் பறிமுதல்

மேலும் அதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த வாலிபரின் உடமைகளை சோதனை செய்தபோது, அவரது சூட்கேசில் துணிகளுக்கு இடையே மறைத்து வைத்து அமெரிக்க டாலர்களை கடத்த முயன்றதை கண்டு பிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாலிபரின் சிங்கப்பூர் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், டாலர்களை கடத்த முயன்றதற்காக அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்