மளிகைக்கடை ஊழியரிடம் அரிவாளை காட்டி ரூ.37½ லட்சம் பறிப்பு

திருச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து மளிகைக் கடை ஊழியரிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.37½ லட்சம் பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-12 19:10 GMT

திருச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து மளிகைக் கடை ஊழியரிடம் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.37½ லட்சம் பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பணம் பறிப்பு

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 56). இவர் கடையில் வியாபாரத்தின் மூலம் வசூலான பணத்தை வங்கியில் கட்டுவதற்காக ஒரு பையில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தை வைத்து கொண்டு நேற்று பகல் 12 மணி அளவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து ஆட்டோவில் ஜங்ஷன் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் 2 பேர் வேகமாக வந்தனர். இதை கண்டு சுதாரித்து கொண்ட ஆட்டோ டிரைவர் வேகமாக ஓட்டினார்.

இந்த நிலையில் அந்த ஆசாமிகள் அரிவாளை காட்டி மிரட்டியதால் பதற்றம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றார். தலைமை தபால் நிலைய சிக்னல் அருகே வந்தவுடன் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அரிவாளால் ஆட்டோவில் வெட்டிவிட்டு கிருஷ்ணகுமாரிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

2 பேருக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார் பணம் பறிக்கப்பட்டது குறித்து கடையின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்ததுடன், கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தால் தலைமை தபால் நிலைய பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்