பெண்ணுக்கு நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்

பெண்ணுக்கு நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-05-31 19:25 GMT

பெரம்பலூர்:

புதிதாக கார் வாங்கினார்

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில், திருச்சி பஞ்சப்பூரில் இயங்கிவரும் கார் ஷோரூமின் கிளை உள்ளது. இந்த கிளையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதி பகுதியில் உள்ள நல்லமண்டித் தெருவைச் சேர்ந்த கண்ணனின் மகள் வாசவி (வயது 35) என்பவர், கடந்த 2012-ம் ஆண்டு மே மாதத்தில் புதிய கார் ஒன்று வாங்கினார்.

அப்போது குறிப்பிட்ட கால கட்டத்தில் முன்பணம் கட்டி கார் வாங்க பதிவு செய்தால், ஒரு நிச்சய பரிசு பொருள் மற்றும் காரின் உதிரிபாகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாசவியிடம், கார் ஷோரூம் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வாசவி ரூ.5 லட்சத்து 59 ஆயிரத்து 373-ஐ செலுத்தி, புதிய காரை வாங்கி, அதனை தனது ஊருக்கு ஓட்டிச்சென்றார்.

2-வது உரிமையாளரா?

இதனைத்தொடர்ந்து காருக்கான முதல் பழுதுநீக்க சர்வீசுக்கு விட்டபோது, காரின் விவரங்களை கார் ஷோருமின் ஊழியர் சரிபார்த்துள்ளார். அப்போது, வாசவியிடம் அவர் 'நீங்கள் காரின் முதல் உரிமையாளரா? அல்லது 2-வது உரிமையாளரா? என்று கேட்டதால் சந்தேகம் அடைந்த வாசவி, தனது கார் ஆவணங்களை மீண்டும் சரிபார்த்தார். அப்போது அந்த கார், சரவணக்குமார் என்பவருக்கு 2012-ம் ஆண்டுக்கு முன்பு விற்பனை செய்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கார் விற்பனை நிறுவனத்தில் புகார் அளித்தார். ஆனால் கார் விற்பனை நிறுவனத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்த வாசவி தனது வழக்கறிஞர் செல்வராஜன் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்ற தலைவர் ஜவஹர் மற்றும் நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

ரூ.3 லட்சம் நஷ்டஈடு

வழக்கை விசாரித்த நீதிபதி, 'புத்தம் புதிய காரை கேட்டு வாங்கிய வாடிக்கையாளருக்கு, ஏற்கனவே விற்பனை செய்த காரை அதன் உண்மை தன்மையை மறைத்து விற்பனை செய்துள்ளனர். மேலும் வாடிக்கையாளருக்கு உறுதி அளித்தபடி காருக்குரிய உதிரிபாகங்கள் மற்றும் பரிசுப்பொருள் வழங்கப்படவில்லை. இந்த சேவை குறைபாடுகள் காரணமாக புகார் மனுதாரர் வாசவிக்கு வழங்கிய காரை பெற்றுக்கொண்டு அவர் செலுத்திய ரூ.5 லட்சத்து 59 ஆயிரத்து 373 தொகையை கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 9 சதவீதம் வட்டியுடன் 30 நாட்களுக்குள் திருப்பி வழங்க வேண்டும். மேலும் புகார் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.3 லட்சமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்' என்று கார் விற்பனை நிறுவனத்தின் கிளை மேலாளர், திருச்சி பஞ்சப்பூர் விற்பனை நிறுவனத்தின் பொது மேலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்