ஆம்னி பஸ் வாங்கிய விவகாரம்: தொழில் அதிபரிடம் ரூ.27¼ லட்சம் மோசடி 8 பேர் மீது வழக்கு

ஆம்னி பஸ் வாங்கிய விவகாரத்தில் தொழில் அதிபரிடம் ரூ.27¼ லட்சம் மோசடி செய்ததாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-06-02 21:04 GMT

சேலம், 

பழைய ஆம்னி பஸ்

சேலம் பட்டைக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். தொழில் அதிபரான இவர் கடந்த 2020-ம் ஆண்டு பழைய ஆம்னி பஸ் ஒன்றை வாங்க விரும்பினார். இதுகுறித்து அம்மாபேட்டையை சேர்ந்த குமார் மற்றும் அஸ்தம்பட்டியை சேர்ந்த சிவகுமார் ஆகியோரிடம் விசாரித்தார்.

இதையடுத்து அவர்கள் சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரிடம் 2010-ம் ஆண்டு மாடலான பழைய ஆம்னி பஸ் விற்பனைக்கு உள்ளதாக சக்திவேலிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு சக்திவேல் பேசினார்.

அப்போது அந்த பஸ் ரூ.26 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விலை பேசப்பட்டது. மேலும் பஸ்சின் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ், சாலை பெர்மிட் மற்றும் தகுதிச்சான்று ஆகியவை சென்னை பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்யும் போது கொடுப்பதாக சங்கர் தெரிவித்தார்.

8 பேர் மீது வழக்கு

இதைத்தொடர்ந்து சக்திவேல் பல்வேறு தவணையாக சங்கரிடம் ரூ.16 லட்சம் கொடுத்தார். குமாரிடம் ரூ.9 லட்சம் கொடுத்தார். மேலும் சர்வீஸ் சார்ஜ் செய்ததாக ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 200 பெற்று கொண்டு அவர்கள் பஸ்சை ஒப்படைத்தனர். பின்னர் இந்த பஸ் குறித்து சக்திவேல் பிற நபர்களிடம் விசாரித்த போது தான், அதன் மதிப்பு ரூ.9 லட்சம் தான் பெறும் என்று தெரியவந்தது.

இதனால் பஸ்சை எடுத்து கொண்டு பணத்தை திரும்ப தருமாறு அவர்களிடம் சக்திவேல் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து அவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குமார், சங்கர் உள்பட 8 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்