தொழில் அதிபர் காரில் ரூ.25 லட்சம் கொள்ளை

நெல்லையில் தொழில் அதிபர் காரில் இருந்த ரூ.25 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2022-12-19 22:15 GMT

நெல்லையில் தொழில் அதிபர் காரில் இருந்த ரூ.25 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழில் அதிபர்

தூத்துக்குடி சண்முகபுரம் புதுக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 42). இவர் அரிசி, வெங்காயம், கிழங்கு வகைகளை தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவர் தனது நண்பரான தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த செல்வராஜுடன் நேற்று காலையில் காரில் நாகர்கோவிலுக்கு சென்றார். அங்கு ஒருவரிடம் தொழில் தேவைக்காக ரூ.25 லட்சம் கடனாக வாங்கிக்கொண்டு தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

பணம் கொள்ளை

இரவு 9 மணி அளவில் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பாடு வாங்குவதற்காக கார் டிரைவரை அனுப்பி உள்ளார்.

காரின் முன் இருக்கையில் சரவணகுமாரும், பின் இருக்கையில் செல்வராஜூம் இருந்தனர். பணம் இருந்த பை பின் இருக்கையில் இருந்தது.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர் காரின் வலது புற கதவைத் திறந்து பணம் இருந்த பையை கண் இமைக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், சரவணகுமார் ஆகியோர் கூச்சல் போட்டனர். சிறிது தூரத்தில் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

வலைவீச்சு

இந்த துணிகர சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநகர தலைமையிட துணை போலீஸ் கமிஷனர் அனிதா, மேற்கு துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் மற்றும் பாளையங்கோட்டை போலீஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்