சேலத்தில் கலர் சாயம் வாங்கி ரூ.25 லட்சம் மோசடி-அண்ணன், தம்பியிடம் போலீஸ் விசாரணை
சேலத்தில் கலர் சாயம் வாங்கி ரூ.25 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக அண்ணன், தம்பியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலர் சாயம்
சேலம் குகை புலிகுத்தி மெயின் ரோட்டை தெருவை சேர்ந்தவர் சபரிநாத். இவர் சாயம் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கருங்கல்பட்டி பகுதியில் சாயப்பட்டறை நடத்தி வரும் வசந்தகுமார், அவருடைய தம்பி ஞானசேகரன் ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சாயம் வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சபரிநாத்திடம் இருந்து வசந்தகுமார் ரூ.18 லட்சத்து 11 ஆயிரத்து 931-க்கும், ஞானசேகரன் ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 278-க்கும் கலர் சாயம் வாங்கி உள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சபரிநாத்துக்கு மொத்தம் ரூ.25 லட்சத்து 86 ஆயிரத்து 209 கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர்கள் இந்த பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.
பிடித்து விசாரணை
இந்த நிலையில் பணத்தை கேட்ட போது வசந்தகுமார், ஞானசேகரன் ஆகிய இருவரும் சேர்ந்து அவரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சபரிநாத் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இந்த மோசடி தொடர்பாக வசந்தகுமார், அவருடைய தம்பி ஞானசேகரன் ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.