பழனி கோவிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் - அமைச்சர் சேகர்பாபு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு (2023) இறுதிக்குள் தொடங்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பழனி தண்டாயுதபாணி கோவில்
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி பந்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது.
இதில் உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.
மேலும் ரோப் கார் கீழ் நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய பேட்டரி கார்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.
பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.200 கோடியில் பெருந்திட்டம்
பழனி கோவிலுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சராசரியாக ஆண்டுக்கு 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையிலும் ரூ.200 கோடி மதிப்பீல் பெருந்திட்ட வரைவு ஒன்றை ஏற்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பெருந்திட்ட வரைவு (மாஸ்டர் பிளான்) இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும். பணிகள் நிறைவடைந்தவுடன், பழனி கோவில் திருப்பதிக்கு இணையாக திகழும்.
கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவை முழுமையாக நிறைவேற்றுவோம். கோவிலின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை முதல் கட்டமாக சம்பள உயர்வை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைவர்.
29 யானைகள் பராமரிப்பு
கோவில்களின் சார்பில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 20-க்கும் மேற்பட்ட யானைகளுக்கு குளியல் தொட்டி கட்டப்பட்டிருக்கின்றன. அனைத்து யானைகளுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனையும், நடை பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடும் மருத்துவர்களின் ஆலோசனையோடு தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.