விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2½ லட்சம் திருட்டு

விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2½ லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது.

Update: 2023-01-19 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). இவர் நேற்று விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று, ரூ.2½ லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்தார்.

பின்னர் அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டியில் வைத்து பூட்டினார். தொடர்ந்து, தனது மோட்டார் சைக்கிளை அங்கிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட் முன்பு நிறுத்திவிட்டு, உள்ளே சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்.

சிறிது நேரத்துக்கு பின்னர் அவர் வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் பெட்டி பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த பணத்தை மர்ம மனிதர்கள் திருடி சென்று இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார்.

உடன் போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்