கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி

கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித்தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் புகார் மனு அளித்துள்ளார்.

Update: 2023-08-31 17:10 GMT

கிராம நிர்வாக அலுவலர்

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த தினேஷ் (வயது 31) என்பவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது சொந்த ஊர் மதுரை. நான் என்ஜினீயரிங் படித்துள்ளேன். தற்போது தனியார் கல்லூரியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். அப்போது அங்கு டிரைவராக பணியாற்றும் ஒருவரின் சகோதரி என்னிடம் உனக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருகிறேன். அதற்கு ரூ.7 லட்சம் ஆகும் என்றார். மேலும் அவருக்கு தெரிந்த திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த நபர் அமைச்சர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை என்னிடம் காண்பித்து அமைச்சர்கள் எல்லாம் எனக்கு பழக்கம். வேலை வேண்டும் என்றால் முதல்கட்டமாக ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும். வேலை கிடைக்காவிட்டால் ஒருவாரத்தில் பணத்தை திருப்பி தந்துவிடுவேன் என்றார்.

பணத்தை மீட்டு தர வேண்டும்

இதை நம்பிய நான் அவர் மற்றும் அவருடன் வந்த ஒருவர் என இருவரிடம் பல்வேறு தவணைகளில் ரூ.4 லட்சம் கொடுத்தேன். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியான பின்னர் வேலை குறித்து அவர்களிடத்தில் கேட்டேன். ஆனால் அவர்கள் வேலை பெற்றுத்தரவில்லை. இதுகுறித்து அவர்களிடத்தில் கேட்டபோது தொடர்ந்து அவர்கள் பணம் தருவதாக தெரிவித்து காலதாமதப்படுத்தினர். பின்னர் அவர்கள் 3 தவணைகளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தனர்.

மீதம் உள்ள பணத்தை கேட்டபோது அந்தநபர்கள் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். எனவே மீதம் உள்ள ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்