போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா, போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை, கடத்தலை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் தேடுதல், சோதனை வேட்டையில் சிக்கிய கஞ்சா, ஓபியம், ஹெராயின், கோகைன், மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் வழக்குகள் முடியும் வரை பாதுகாக்க வேண்டிய நிபந்தனை போலீசாருக்கு இருந்தது.
இந்த நிலையில் போதைப்பொருட்கள் அதிகளவில் குவிந்தது. இதனால் ஆபத்து நேரிடகூடும் என்பதையும், போதிய இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கு போலீசார் முடிவு எடுத்தனர்.
இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்காக வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யா பாரதி தலைமையில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி, தடயவியல் துறை துணை இயக்குனர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் எவ்வளவு போதைப்பொருட்கள் இருக்கிறது என்ற பட்டியலை தயாரித்தனர். பின்னர் இந்த போதைப்பொருட்களை அழிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இதில் 60 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 1,300 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் போன்ற போதைப்பொருட்களை அழிப்பதற்கு இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து சர்வதேச போதைப்பொருட்கள் ஒழிப்பு தினமான நேற்று இந்த போதைப்பொருட்களை எரித்து அழிப்பதற்கு போலீசார் திட்டமிட்டனர். அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம் கிராமத்தில் ஆபத்தான ரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
1,000 டிகிரி வெப்பத்தை தாங்கும் எந்திரத்தில் போதைப்பொருட்களை போட்டு போலீஸ் அதிகாரிகள் அழித்தனர்.