கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.18 கோடி மோசடி

பெரம்பலூர் மாவட்டத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.18 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2023-05-18 19:15 GMT

கிரிப்டோ கரன்சியில் முதலீடு

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் திரண்டு வந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மோசடி புகார் மனுக்களை தனித்தனியாக கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஸ்டான்லி சைமன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கிரிப்டோ கரன்சியில் ஒரு காயினில் முதலீடு செய்தால் 10 முதல் 20 சதவீதம் வரை அதிக லாபம் பெறலாம் என்று மூளைச்சலவை செய்தார்.

மேலும் முதலீடு செய்யும் அசல் தொகைக்கு தாமே பொறுப்பு என்றும் கூறினார். அவர் கூறியதை நம்பி நாங்கள் பணத்தை முதலீடு செய்தோம். ஆனால் அந்த பணத்துக்கு லாபமும் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.

ரூ.18 கோடி மோசடி

இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எங்களிடம் பெறப்பட்ட பணமானது அவரது மனைவி மற்றும் மகளிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரிகிறது. பணப்பரிவர்த்தனை அவரது மனைவியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே அவரது மனைவி, மகளை இந்த வழக்கில் சேர்த்தால் தான் எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். அவர்களிடம் விசாரணை செய்து எங்களுடைய பணத்தை திரும்ப பெற்று தருவதுடன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 200 பேரிடம் மொத்தம் சுமார் ரூ.18 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்