நெல்லையில் பட்டபகலில் துணிகரம்: தி.மு.க. பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை
நெல்லையில் தி.மு.க. பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து பட்டபகலில் ரூ.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மகாராஜநகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் அய்யப்பன். இவரிடம் நெல்லை தியாகராஜநகரை சேர்ந்த துரை என்பவர் கார் டிரைவராக உள்ளார். தி.மு.க.பிரமுகரான பரமசிவன் அய்யப்பன் இன்று துரையிடம் வங்கியில் இருந்து பணம் எடுத்து வர கூறினாராம்.
இதனால் துரை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள 2 வங்கிகளில் சுமார் ரூ.17 லட்சம் எடுத்து வந்தாராம். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது டிரைவர் ஏற்கனவே எடுத்த ரூ.17 லட்சத்தை காரின் முன்பக்க இருக்கையில் ஒரு பையில் வைத்துவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மர்ம கும்பல் காரின் முன்பக்க கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்து, அங்கு இருந்த ரூ.17 லட்சத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
நெல்லையில் பட்டபகலில் தி.மு.க. பிரமுகர் காரின் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.