கோவை பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடி

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த லண்டன் வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-21 19:00 GMT

கோவை,

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவை பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த லண்டன் வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டன் வாலிபருடன் பழக்கம்

கோவை வடவள்ளி அருகே உள்ள பிரபாநகரை சேர்ந்தவர் 32 வயது பெண். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். தனியாக வசித்த எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக லண்டனை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நாங்கள் நட்பாக பழகி வந்தோம். அப்போது அவர் என்னிடம் விமான ஓட்டியாக உள்ளதாக கூறினார்.

மேலும இந்திய பெண்ணை திருமணம் செய்ய விரும்பு வதாகவும் என்னிடம் கூறினார். இதனையடுத்து நான் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடன் பழகி வந்தேன்.

பரிசு பொருட்கள்

இந்தநிலையில் அவர் லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் மற்றும் தங்கம் அனுப்புவதாக கூறினார். மேலும் என்னை நேரில் வந்து பார்க்க வருவதாகவும் கூறினார். கடந்த 13-ந் தேதி அவர் என்னை தொடர்பு கொண்டு மும்பைக்கு வந்து விட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் இருந்து சுங்க இலாகா அதிகாரி என ஒருவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்கள் உங்களது பெயரை கூறி லண்டனில் இருந்து ஒருவர் வந்து உள்ளார். அவர் சில பரிசு பொருட்கள் மற்றும் தங்கம் உள்பட ரூ.68 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொண்டு வந்து உள்ளார்.

அதற்கு வரியாக ரூ.16 லட்சத்து 43 ஆயிரத்து 600 செலுத்த வேண்டும் என்றார். இதனையடுத்து நான் வாலிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது என்னிடம் தற்போது பணம் இல்லை என்றும், உடனடியாக நீ பணத்தை அனுப்புமாறும் கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் அந்த வாலிபரின் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது.

போலீசார் விசாரணை

எந்த பரிசு பொருட்களும் எனக்கு வந்து சேரவில்லை. என்னை நம்ப வைத்து அவர் மோசடி செய்து விட்டார். எனவே என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் ரூ.16 லட்சத்து 43 ஆயிரத்து 400 பணத்தை மோசடி செய்த லண்டன் வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் லண்டன் வாலிபர் என்று கூறி கோவை பெண்ணிடம் பேசிய நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்