கேரள தொழில் அதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி

கோவையில் நிலம் வாங்கித்தருவதாக கூறி கேரள தொழில் அதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2022-10-13 18:45 GMT

கோவையில் நிலம் வாங்கித்தருவதாக கூறி கேரள தொழில் அதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கேரள தொழில் அதிபர்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கட்டம்கரா பகுதியை சேர்ந்தவர் நவாஸ் (வயது 50). தொழில் அதிபர். பல்வேறு வியாபாரங்கள் செய்து வருகிறார்.

இவர் கோவை மாவட்டத்தில் நிலம் வாங்க முடிவு செய்தார்.

இதற்கிடையே அவருக்கு குனியமுத்தூரை சேர்ந்த அன்சாரி என்பவர் அறிமுகமானார்.அவர் சிறுமுகை அருகே நிலம் இருப்பதாகவும், அதை வாங்க ரூ.15 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும் நவாசிடம் கூறியதாக தெரிகிறது.

ரூ.15 லட்சம் மோசடி

அதை நம்பிய நவாஸ், அன்சாரியிடம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.15 லட்சம் கொடுத்து உள்ளார். இதையடுத்து அவர் நிலம் வாங்குவதற்காக மீதி பணத்திற்கு வங்கியில் கடன் பெற முயன்ற உள்ளார்.

ஆனால் அவருக்கு எதிர்பார்த்தபடி வங்கிக் கடன் கிடைக்க வில்லை என்று தெரிகிறது.

இதனால் நவாஸ், அன்சாரியை தொடர்பு கொண்டு, எனக்கு வங்கியில் கடன் கிடைக்கவில்லை, எனவே தற்போது நிலம் வாங்க விரும்ப வில்லை.

ஏற்கனவே கொடுத்த ரூ.15 லட்சத்தை திரும்ப கொடுத்து விடுமாறு கேட்டு உள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அன்சாரி பணத்தை கொடுக்க வில்லை என்று தெரிகிறது.

இது குறித்து நவாஸ் அளித்த புகாரின் பேரில் அன்சாரி மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்