அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி

மயிலாடும்பாறை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-28 20:00 GMT

அரசு வேலை

தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் மூலக்கடை அருகே உள்ள சோலைத்தேவன்பட்டியை சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவருடைய மனைவி ஜெயா (வயது 48). இவர், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் முருகன் (56). அவர் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். அவருடைய வீட்டுக்கு காஞ்சீபுரம் மாவட்டம் செருகம்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு வந்தார். ஜோதிடம் பார்த்து விட்டு எனது வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்குமாறு ராஜேந்திரன் கூறினார். நான் தண்ணீர் கொடுத்தபோது, எனது குடும்பம் பற்றி விசாரித்தார்.

அப்போது எனது மகன்கள் 2 பேர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருப்பதாக கூறினேன். அதற்கு, ராஜேந்திரன் தனக்கு சென்னையில் அரசு உயர் அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், பலருக்கு அரசு துறைகளில் வேலை வாங்கிக் கொடுத்து இருப்பதாக கூறினார். எனது மூத்த மகன் முத்தமிழ்செல்வனுக்கும் (28) அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்கு முதற்கட்டமாக ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றார்.

ரூ.13 லட்சம்

அதை நம்பிய நான் ராஜேந்திரனிடம், 2019-ம் ஆண்டு ரூ.5 லட்சத்தை கொடுத்தேன். பின்னர் அவர் கூறியபடி சென்னைக்கு சென்ற போது ஆவடியை சேர்ந்த ராஜாராம் (56) என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாக கூறினர். அதற்கு மேலும் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் கேட்டனர். அந்த பணத்தை வங்கிக் கணக்கு மூலம் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். மொத்தம் ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் மீது ராஜேந்திரன், ராஜாராம் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரையும் தேடி வந்தனர்.

தலைமறைவாக இருந்த 2 பேரையும் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்கநாயகி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், சுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், சென்னையில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

2 பேர் கைது

அவரை தேனிக்கு நேற்று அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முதலில் வாங்கிய ரூ.5 லட்சத்தில், ஜோதிடர் முருகன் ரூ.3 லட்சத்தை தனக்கான கமிஷன் தொகை என்று வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில், முருகனையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான ராஜேந்திரன், முருகன் ஆகிய 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து அவர்களை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ராஜாராமை தேடி வருகின்றனர்.

கைதான ராஜேந்திரன் சி.ஆர்.பி.எப். போலீஸ் படைபிரிவில் பணியாற்றி வந்ததும், அந்த பணியில் இருந்து விலகிவிட்டு சில இடங்களில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்ததாகவும் தெரியவந்தது. மேலும், அவர் மீது திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் போலீஸ் நிலையத்திலும் மோசடி வழக்கு உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்