நீலகிரியில் காணாமல், திருடு போன ரூ.10 லட்சம் செல்போன்கள் மீட்பு
நீலகிரியில் காணாமல் மற்றும் திருடு போன ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஊட்டி
நீலகிரியில் காணாமல் மற்றும் திருடு போன ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காணாமல் போன செல்போன்கள்
நீலகிரி மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடுபோய் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கலந்து கொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை வழங்கினார்.
இதன்படி ரூ.10.40 லட்சம் மதிப்புள்ள 52 ஸ்மார்ட் செல்போன்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் பேடிஎம்., மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை வங்கி மற்றும் பேடிஎம்., நிர்வாகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு உரியவரிடம் கொடுக்கப்பட்டது.
மேலும் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டுவின் கார் டிரைவர், தவறுதலாக வேறு வங்கி கணக்கு எண்ணுக்கு அனுப்பிய ரூ.10 ஆயிரம் தொகையும் திரும்ப பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்லைன் பண மோசடி
நீலகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையம் மூலம் ஆன்லைன் பண மோசடி, லோன் ஆப் மூலம் மோசடி, மார்பிங், ஆன்லைன் மூலம் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 67 வழக்குகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 679 புகார்கள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நடந்த சைபர் கிரைம் வழக்குகளில் இதுவரை ரூ.6 கோடியே 1 லட்சத்து 67 ஆயிரத்து 232 பணம் மோசடி பேர்வழிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளது. இதில் ரூ.8 லட்சத்து 52 ஆயிரத்து 230 மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர சுமார் ரூ.4 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரத்து 404 பணம் செல்லாமல் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. முடக்கப்பட்டுள்ள பணம் நீதிமன்ற உத்தரவு பெற்று மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை தொலைந்து போன 129 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிலிப், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி, சப் இன்ஸ்பெக்டர்கள் கலைவாணி, யசோதா மற்றும் போலீசார் பிரவீன், கருணாகரன், ஜெகதீஸ், கண்ணன் உள்பட பலர் இருந்தனர்.