ஈரோட்டில் ரூ.1¾ லட்சம் கையாடல்: ஜவுளி நிறுவன மேலாளர் கைது

ஈரோட்டில் ஜவுளி நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-27 22:38 GMT

ஈரோட்டில் ஜவுளி நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.1¾ லட்சம் கையாடல்

மதுரை புது ராமநாதபுரம் ரோடு, தியாகராஜன் பள்ளி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 48). இவர் கடந்த 5 மாதங்களாக ஈரோடு அசோகபுரம் பகுதியில் ஜவுளி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு, தேனி அல்லி நகரம் சடைய முனீஸ்வரர் கோவில் வீதியை சேர்ந்த மணிக்குமார் (40) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். ஜவுளி விற்பனையில் வசூலாகும் பணத்தை மணிக்குமார் வாரந்தோறும் வங்கியில் செலுத்திவிட்டு கடை உரிமையாளரான மோகன்ராஜுக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

அதன்படி கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி ஜவுளி விற்பனையில் வசூலான ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டதாக நிறுவன உரிமையாளர் மோகன்ராஜுக்கு போன் மூலமாக மேலாளர் மணிக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 26-ந் தேதி அன்று ஈரோடு வந்த உரிமையாளர் மோகன்ராஜ், வங்கி கணக்கை சரி பார்த்தபோது, கடந்த மாதம் 8-ந்தேதி மணிக்குமார் குறிப்பிட்டவாறு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரியவந்தது.

மேலாளர் கைது

இதுகுறித்து கேட்டபோது, பணத்தை தான் செலவு செய்து விட்டதாகவும், மறுநாள் கொடுத்து விடுவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் மணிக்குமார் வேலைக்கு வரவில்லை. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு பஸ் நிலையம் அருகில் நின்றிருந்த மணிக்குமாரை, மோகன்ராஜ் பிடித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மேலாளர் மணிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்