பள்ளி ஆசிரியரிடம் ரூ.1½ கோடி மோசடி; 2 பேர் கைது
நெல்லையில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பெர்க்மான்ஸ் (வயது 65). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க் அமைக்க இடம் வேண்டி சில நிலதரகர்களை அனுகினார். அப்போது பெர்க்மான்சை தாழையூத்தை சேர்ந்த துரை (48), மேலப்பாளையத்தை சேர்ந்த பரித்புகாரி (54) ஆகியோர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை தெற்கு பைபாஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு இடத்தை காட்டியுள்ளனர். இந்த இடத்தை பெர்க்மான்சுக்கு முடித்து தருவதாக கூறி அவரிடம் இருந்து முதல் தவணையாக ரூ.1½ கோடியை 2 பேரும் வாங்கினர்.
ஆனால், அதன்பின்னர் அந்த இடத்தை பெர்க்மான்சுக்கு முடித்துக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெர்க்மான்ஸ் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சேவியர், முத்தப்பா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இடம் பரித்புகாரி, துரை ஆகியோருக்கு சொந்தமான இடம் இல்லை என்பதும், அது வேறொருவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.