ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை: 4 பேர் கும்பல் வெறிச்செயல்
கோர்ட்டில் கையெழுத்துபோட்டு விட்டு திரும்பி வந்த ரவுடியை 4 பேர் கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. அவருடன் வந்த நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
கோவை,
கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது22) ரவுடி. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலை தொடர்பாக, கோகுல் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேர் மீது சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலை வழக்கு
இதற்கிடையே கோகுல் உள்பட 5 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கோகுல் ஜாமீனில் வெளியே வந்தார்.
குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு விசாரணை கோவை 3-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தனது வக்கீலுடன் உள்ளே சென்று கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தார்.
தொடர்ந்து கோகுல், மனோஜ் ஆகியோர் கோர்ட்டுக்கு பின்புறம் கோபாலபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் காலை 11 மணியளவில் டீ குடிக்க சென்றனர்.
ஓட, ஓட விரட்டிக்கொலை
அப்போது அவர்களை, 4 பேர் கும்பல் பின் தொடர்ந்து வந்தனர். திடீரென அந்த கும்பல் கோகுலை சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.
கோகுலும், அவரது நண்பரும், அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்கள். இருப்பினும், அந்த கும்பல் நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி கோகுலை வெட்டியது.
இதில் அவரது கழுத்தில் வெட்டு விழுந்தது. உடனே மனோஜ், அவர்களிடம் இருந்து கோகுலை காப்பாற்ற முயன்றார். அவரையும் அந்த கும்பல் வெட்டினர்.
இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கோகுல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.
போலீஸ் விசாரணை
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். சிலர் அந்த பகுதியை விட்டு ஓடினார்கள். சிலர் இந்த பயங்கர சம்பவத்தை செல்போனில் படம் பிடித்தனர்.
இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், உடனடியாக அங்கு வந்து விசாரணை நடத்தினர். ரவுடி குரங்கு ஸ்ரீராமின் கொலைக்கு பழிதீர்க்க இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வெட்டுகாயம் அடைந்த மனோஜ் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.