வேலூர் ஜெயிலில் கைதியை சந்திக்க முயன்ற ரவுடி ஜானி மனைவி கைது
போலி அடையாள அட்டையை காண்பித்து வேலூர் ஜெயலில் கைதியை சந்திக்க முயன்ற ரவுடி ஜானி மனைவி கைது செய்யப்பட்டார்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய ஜெயிலில் காட்பாடி பகுதியை சேர்ந்த சீனு என்ற சீனிவாசன் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியை ஷாலினி (வயது 33) என்பவர் கடந்த 3-ந் தேதி ஜெயிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் வக்கீல் என்று கூறி அடையாள அட்டை ஒன்று கொடுத்துள்ளார். அதனை ஜெயில் அதிகாரிகள் சோதனை செய்ததில் அடையாள அட்டை வேறு நபரின் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பற்றி விசாரித்தனர். அதில், அவர் ரவுடி ஜானியின் மனைவி ஷாலினி என்பதும், கணவரின் கூட்டாளியான சீனிவாசனை போலி வக்கீல் அடையாள அட்டையை கொடுத்து சந்திக்க முயன்றதும் தெரிய வந்தது.
அதையடுத்து அவர் கைதி சீனிவாசனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த ஷாலினி சிறை காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து ஜெயிலர் மோகன் வேலூர் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஷாலினி மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் எதிரே நின்று கொண்டிருந்த ஷாலினியை பாகாயம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாபுரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.