வழிப்பறி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டு சிறை தேனி கோர்ட்டு தீர்ப்பு

தேனியில் வழிப்பறி வழக்கில் ரவுடிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-11-03 18:45 GMT

வழிப்பறி

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி போலீஸ் நிலையம் அருகே வசிப்பவர் ரமேஷ்குமார் (வயது 37). கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இவர், தேனி பங்களாமேட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த செல்வம் என்ற சூப்புசெல்வம் (36) அங்கு வந்தார். அவர், தனது கையில் வைத்து இருந்த ஒரு கூர்மையான வாளை காட்டி மிரட்டி, ரமேஷ்குமாரிடம் இருந்து ரூ.450-ஐ பறித்தார்.

இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் ரமேஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூப்புசெல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விவேகானந்தன் ஆஜராகி வாதாடினார்.

7 ஆண்டு சிறை

வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாத் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சூப்புசெல்வத்துக்கு வழிப்பறி செய்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும், ஆயுதம் காட்டி கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட சூப்புசெல்வம் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக தேனி, அல்லிநகரம், உத்தமபாளையம் மற்றும் கோவை மாவட்ட போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த அவர் மற்றொரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்