சென்னையில் பரபரப்பு; பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்...!

போலீசார் மீது குண்டு வீசிவிட்டு, அரிவாளால் வெட்டிவிட்டு ரவுடி தப்பியோட முயன்றார்.

Update: 2022-09-28 03:36 GMT

 

சென்னை,

சென்னை தாம்பரம் கண்டிகையை அடுத்த எருமையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. கண்டிகை பகுதியில் ரவுடிகள் குழுக்களாக செயல்பட்டுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் மேத்தீவ் என்ற ஒரு ரவுடி குழுவும், இதற்கு எதிராக லெனின் என்ற ரவுடி குழுவும் செயல்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேத்தீவ் ரவுடி குழுவில் உள்ள ரவுடி சச்சின் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சோமமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சோமமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ரவுடி சச்சினை பிடிப்பதற்காக சென்றனர்.

அப்போது, போலீசார் தன்னை பிடிக்க வருவதை அறிந்த ரவுடி சச்சின் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். ஆனால், அந்த நாட்டு வெடிகுண்டு வெடிக்கவில்லை.

இதனால், தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு பாஸ்கர் என்ற காவலரை வெட்டியுள்ளார். இதில், காவலர் பாஸ்கர் படுகாயமடைந்தார்.

நிலைமையை உடனடியாக உணர்ந்த காவல் ஆய்வாளர் சிவக்குமார் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ரவுடி சச்சினை சுட்டார். ரவுடி சச்சினின் முழங்காலில் 2 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ரவுடி சச்சின் படுகாயமடைந்து சுருண்டு விழுந்தார். இதனை தொடர்ந்து ரவுடியை கைது செய்த போலீசார் அவரை குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக ரவுடி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

வெடிகுண்டு வீசி, அரிவாளால் போலீசார் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்