நெய்வேலியில் 25 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது

நெய்வேலியில் 25 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது செய்யப்பட்டார். முன்னதாக போலீசார் துரத்தியபோது கீழே விழுந்ததால் அவரது கால் முறிந்தது.

Update: 2023-10-17 19:39 GMT

நெய்வேலி,

நெய்வேலி இந்திரா நகர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன் மகன் குருமூர்த்தி. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மே மாதம் 2-ந் தேதி இந்திரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கீழ்வடக்குத்தை சேர்ந்த ரவுடி கோபி, தனது நண்பர்களுடன் அங்கு வந்து குருமூர்த்தியை வழிமறித்து எனது எதிரி வீரமணிக்கு நீ ஏன் உதவி செய்கிறாய்? என்று கூறி அவரை கத்தியால் வெட்டினார். இனிமேலும் வீரமணிக்கு உதவி செய்தால் உன்னை வெட்டி கொலை செய்து விடுவேன் என்று கோபி மிரட்டிவிட்டு தலைமறைவானார்.

25 வழக்குகள் நிலுவை

இது குறித்து குருமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை வலைவீசி தேடி வந்தனர். கோபி மீது நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் கொலை, அடிதடி உள்ளிட்ட உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடையே 3 வழக்குகளில் கோபி மீது கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. எனவே அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் கோபியை தேடி வந்தனர்.

போலீசாரை தள்ளிவிட்டு...

இந்த நிலையில் நேற்று காலையில் வடக்குத்து மீன் கடையில் கோபி கத்தியை காண்பித்து அங்கு வந்தவர்களை மிரட்டிக்கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கோபியை பிடிக்க முயன்றனர். உடனே கோபி, போலீசாரை தள்ளிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் செல்ல முயன்றார்.

போலீசாரும் தங்களது வாகனங்களில் கோபியை துரத்திச் சென்றனர். அப்போது சாலையின் வேகத்தடையில் நிலை தடுமாறிய கோபி, மோட்டார் சைக்கிளுடன் சாலையோர பள்ளத்தில் கீழே விழுந்தார்.

காலில் எலும்பு முறிவு

இதில் அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை கைது செய்து, சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்