போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வேப்பனப்பள்ளி: 3 மாநில சாலைகள் பிரியும் இடத்தில் ரவுண்டானா அமைக்கப்படுமா?-வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

Update: 2022-11-05 18:45 GMT

வேப்பனப்பள்ளி:

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வேப்பனப்பள்ளியில், 3 மாநில சாலைகள் பிரியும் இடத்தில் ரவுண்டானா அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.

போக்குவரத்து நெரிசல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் எல்லை பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள், பஸ், கார்கள் செல்கின்றன.

இதனால் வேப்பனப்பள்ளி நகரம் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில ஆண்டுகளாக வேப்பனப்பள்ளி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக 3 மாநில எல்லை பிரியும் கொங்கனப்பள்ளி ஜங்ஷன் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

ஸ்தம்பித்து நிற்கும் வாகனங்கள்

சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாலும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாலும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வரக்கூடிய நேரத்தில் அதிகமாக நெரிசல் காணப்படுகிறது. இதன் காரணமாக சாலையில் 4 சந்திப்புகளிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன.

3 மாநில சாலைகள் பிரிய கூடிய கொங்கனப்பள்ளி ஜங்ஷனில் ரவுண்டானா மற்றும் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவ்வாறு அமைக்கும் பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ரவுண்டானா அவசியம்

கடவரப்பள்ளியை சேர்ந்த இல்லத்தரசி சூர்யகலா:-

வேப்பனப்பள்ளியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. 3 மாநிலங்களுக்கான வாகனங்களும் அந்த வழியாக செல்வதால் நெரிசல் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக கர்நாடகா, ஆந்திர மாநில வாகனங்கள் பிரிந்து செல்ல கூடிய சாலை பகுதியில் ரவுண்டானா அமைத்தால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்து விடும். மேலும் அங்கு வேப்பனப்பள்ளி நகரின் வளர்ச்சி கருதி, சிக்னல்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்துகள்

வேப்பனப்பள்ளியை சேர்ந்த கடை ஊழியர் சந்திரசேகர்:-

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் தினமும் வேப்பனப்பள்ளி வழியாக தமிழகத்திற்கு வருகின்றன. குறிப்பாக கர்நாடக மாநிலம் கே.ஜி.எப்., மாலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திர மாநிலம் குப்பத்திற்கும் வேப்பனப்பள்ளி வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இதனால் இந்த சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் அடிக்கடி அந்த சாலையில் விபத்துகளும் நடக்கின்றன. எனவே 3 மாநில சாலைகள் பிரிய கூடிய கொங்கனப்பள்ளி ஜங்ஷன் சாலையில் ரவுண்டானா, சிக்னல் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்