சுற்றுலா பயணிகளை கவரும் ரோஜா பூக்கள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கொடைக்கானலில் விரைவில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற பிரையண்ட் பூங்காவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே மலர்ச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது மலர்ச்செடிகளில் பல்வேறு வகையான லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. குறிப்பாக பூங்காவில் பல்வேறு வண்ணங்களில் பூத்துள்ள ரோஜா பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதிலும் பச்சை நிறத்தில் பூத்துள்ள ரோஜா பூக்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன், கேமராக்களில் பூக்களுடன் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே கொடைக்கானலில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் மிதமான சாரல் மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. இதனால் மலைப்பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ண சூழல் நிலவியது. இருப்பினும் மழையில் நனைந்தபடி சுற்றுலா இடங்களை பார்வையிட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.