ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு காளைகளுக்கு அணியும் கயிறு விற்பனை மும்முரம்
பொங்கல் விழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு அணிவிக்கும் கயிறு விற்பனை சிங்கம்புணரி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிங்கம்புணரி,
பொங்கல் விழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு அணிவிக்கும் கயிறு விற்பனை சிங்கம்புணரி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கயிறு விற்பனை
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பிறந்தாலே சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டிகள் தொடங்கி விடும். தற்போது இந்தாண்டு பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் மாட்டு பொங்கல் தினத்திற்கு மறுநாள் புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக இந்த ஆண்டின் முதல் போட்டியாக வரும் 6-ந்தேதி சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு அணிய உள்ள மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு, இழுவை கயிறு, அலங்கார கயிறு உள்ளிட்ட கயிறு விற்பனை சிங்கம்புணரி பகுதியில் உள்ள கடைகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வகைகள்
இதுகுறித்து கயிறு விற்பனையாளர் ராஜ்குமார் கூறியதாவது:- சிங்கம்புணரி பகுதியில் காளைளுக்கு அணியும் கயிறு விற்பனை கடையை கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறையாக நடத்தி வருகிறோம். ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு காளைகளுக்கு பல்வேறு ரக கயிறுகள் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக மேலப்பாளையம் கயிறு, பங்கா கயிறு வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மேலப்பாளையம் ரக கயிறு ரூ.300-க்கும், பங்கா வகை கயிறு ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர காளைகளுக்கு அணியும் அலங்கார கயிறு, நெத்தி பாறை கயிறு, இழுவை கயிறு உள்ளிட்ட கயிறுகளும், கலர் பொட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது.
உழைப்பு தன்மை அதிகம்
குறிப்பாக காளைகளுக்கு அணியும் மூங்கணாங்கயிறு சில நேரத்தில் மூக்கில் காயத்தை ஏற்படுத்துவதால் டியுப் என்று அழைக்கப்படும் கயிறு வகைகள் விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த வகை கயிறு எவ்வித காயத்தையும் ஏற்படுத்தாது. தற்போது இந்த வகையான கயிறு வகைகளை சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளை வளர்ப்போர் சார்பில் வாங்கி செல்கின்றனர். இதுதவிர தற்போது அறுவடை நேரம் என்பதால் அறுவடைக்கு தேவைப்படும் அனைத்து உபகரண பொருட்களும் விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
மஞ்சுவிரட்டு ஆர்வலர் சிவக்குமார் (எம்.சூரக்குடி):- ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் மாவட்டத்தில் முதல் மஞ்சுவிரட்டாக எம்.சூரக்குடி கிராமத்தில் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் சிங்கம்புணரி பகுதியில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு காளைகளுக்கு அணியும் கயிறு வகைகள் மற்றும் சலங்கை மணிகள் ஆகியவை தரமானதாகவும், அதிக நாட்கள் உழைப்பை தரக்கூடியதாகவும் தயாரிக்கப்பட்டு வருவதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் இங்கு வந்து இதை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் இங்கு வந்து இதை வாங்கிச் செல்வதால் இங்குள்ள வணிகர்களின் பொருளாதார நிலை உயரும் வகையில் உள்ளது என்றார்.