பழனி மலைக்கோவிலுக்கு சென்ற ரோப்கார் பெட்டி பாறையில் உரசியதால் பரபரப்பு; பக்தர்கள் அதிர்ச்சி

பழனி மலைக்கோவிலுக்கு சென்ற ரோப்கார் பெட்டி ஒன்று பாறையில் உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2022-10-14 18:45 GMT

பழனி மலைக்கோவிலுக்கு சென்ற ரோப்கார் பெட்டி ஒன்று பாறையில் உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ரோப் கார் சேவை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை ஆகியவற்றை பிரதானமாக பயன்படுத்தி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.

மேலும் பக்தர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரின் வசதிக்காக ரோப்கார், மின்இழுவை ரெயில்களும் இயக்கப்படுகிறது. இதன் வழியாகவும் ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

இதில் பழனி கிழக்கு கிரிவீதியில் ரோப்கார் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு 2 ரோப்கார்கள் உள்ளன. இவற்றில் தலா 4 பெட்டிகள் உள்ளன. மலையின் அழகை ரசித்தபடி, சுமார் 2 நிமிடத்தில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு ரோப்காரில் செல்ல முடிவதால் பெரும்பாலானோர் இதை தேர்வு செய்கின்றனர். ஒரு பெட்டியில் 4 பேர் வீதம் 16 பேர் பயணிக்கலாம். அதே நேரத்தில் எடையை பொறுத்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

பாறையில் உரசிய பெட்டி

இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் அடிவாரம் ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ரோப்கார் பெட்டிகளில் ஏறினர்.

பின்னர் அந்த ரோப்கார் பெட்டிகள் மலைக்கோவில் நோக்கி புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் திடீரென ரோப் கம்பிவடத்தில் பொருத்தப்பட்டிருந்த கடைசி பெட்டி அசைந்தாடி அருகே உள்ள பாறையில் உரசியது. இதனால் அதில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், அபயகுரல் எழுப்பினர்.

இதைக்கண்டதும் சுதாரித்து கொண்ட ரோப்கார் நிலைய பணியாளர்கள் உடனடியாக ரோப்கார் இயக்கத்தை நிறுத்தினர். பின்னர் பெட்டியை பணியாளர்கள் பார்வையிட்டனர். ஆனால் பெட்டியில் லேசான சேதம் மட்டுமே இருந்தது.

வேறு பாதிப்பு ஏதும் இல்லாததால் மீண்டும் அதன் சேவை தொடங்கியது. பின்னர் மலைக்கோவில் ரோப்கார் நிலையத்துக்கு, அந்த பெட்டிகள் வந்தடைந்தன. அப்போது பாறையில் உரசிய பெட்டியில் இருந்து இறங்கிய பக்தர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

அதிக பாரம்

இதற்கிடையே கோவில் என்ஜினீயர்கள் குழுவினர், மலைக்கோவில் ரோப்கார் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பாறையில் உரசிய ரோப்கார் பெட்டியை பார்வையிட்டு சோதனை செய்தனர். அதில் பாரம் அதிகமாக ஏற்றியதால் ரோப் பெட்டி பாறையில் உரசி சேதம் அடைந்தது தெரியவந்தது.

இருப்பினும் ரோப்கார் இயக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று என்ஜினீயர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியது. ரோப்கார் பெட்டி பாறையில் உரசிய சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்