4 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட மயான கொட்டகை
வேதாரண்யம் அருகே மீன்பிடி தொழிலாளியின் உடலை தகனம் செய்ய 4 மணி நேரத்தில் மயான கொட்டகை அமைக்கப்பட்டது.
வேதாரண்யம் அருகே மீன்பிடி தொழிலாளியின் உடலை தகனம் செய்ய 4 மணி நேரத்தில் மயான கொட்டகை அமைக்கப்பட்டது.
மீன்பிடி தொழிலாளி சாவு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது35). மீன்பிடி தொழிலாளி. இவர் கீழக்காடு அணைக்கரை குளத்தில் கடந்த 7-ந் தேதி மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மீன்பிடி வலையல் சிக்கி இறந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முனியப்பன் வசிக்கும் பகுதியில் 4 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு திறந்த வெளி சுடுகாடு மட்டுமே உள்ளது. இங்கு மழை காலங்களில் உடல்களை தகனம் செய்ய மயான கொட்டகை கிடையாது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் முனியப்பனின் உடல் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கருப்பம்புலத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது.
அப்போது மழை வரும் சூழல் இருந்ததால் அவருடைய உடலை திறந்த வெளி சுடுகாட்டில் எப்படி தகனம் செய்வது? என உறவினர்கள் தவித்தனர்.
4 மணி நேரத்தில் கொட்டகை
இதை அறிந்த கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் ஊராட்சி மன்ற நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம் ஒதுக்கீடு செய்து சுடுகாட்டில் சிமெண்டு சீட் போட்டு கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி 4 மணி நேரத்தில் கொட்டகை அமைக்கப்பட்டு, அங்கு முனியப்பனின் உடல் தகனம் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக இங்கு மயான கொட்டகை இல்லமால் திறந்தவெளியில் உடல்களை தகனம் செய்வதற்கு சிரமப்பட்டு வந்த நிலையில் 4 மணி நேரத்தில் மயான கொட்டகை அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.