அரசு ஆஸ்பத்திரி ஆய்வகம் முன்பு மேற்கூரை
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி ஆய்வகம் முன்பு மேற்கூரை அமைக்கப்பட்டது.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், சுமார் 600-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளிகளுடன் உடன் இருப்போர் மற்றும் ஆய்வகத்தில் ரத்தம், சளி மாதிரிகளை கொடுப்போர், அதற்கான ஆய்வக முடிவுகளை பெறுவோர்கள் அமர்வதற்கு என்று ஆஸ்பத்திரி வளாகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த இடத்தில் மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால் நோயாளிகளும் அவர்களுடன் இருப்போர்களும் வெயிலில் காயும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று 'தினத்தந்தி' யில் செய்தி பிரசுரம் ஆனது. இதையொட்டி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஆய்வகத்தின் முன்பு தகரத்தினால் ஆன மேற்கூரை துரிதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி நிர்வாகிகள் கூறும் போது, செய்தியில் குறிப்பிட்டுள்ள குறைகள் அனைத்தும் விரைவாக நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.