மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-12-05 18:45 GMT

குன்னூர், 

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாறைகள் விழுந்தன

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. அதன் பின்னர் மழை பெய்யாமல், பகலில் வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் சாலையோர மண் ஈரப்பதமாக இருந்தது.

இந்தநிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை காட்டேரி பூங்கா மற்றும் மரப்பாலம் இடையே 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. பின்னர் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் பாறை ஒன்று உருண்டோடி மரத்தின் மீது விழுந்ததால், ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த சமயத்தில் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்

மலைப்பாதையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் பொக்லைன் எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பொக்லைன் எந்திரம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சாலையில் கிடந்த பாறைகளை அகற்ற தாமதம் ஆனது.

இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, ேமட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் வர அனுமதிக்கப்பட்டது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. பிற வாகனங்கள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்று வந்தன. இதைதொடர்ந்து போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சாலையில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இருப்பினும், ராட்சத பாறையை அகற்ற முடியவில்லை. இதனை உடைத்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. 3 மணி நேரத்திற்கு பின்னர் பாறைகள், மண் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மலைப்பாதையில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டதோடு, வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்