திண்டுக்கல் அருகே திருப்பூர் தொழில் அதிபரிடம் கத்திமுனையில் ரூ.90 லட்சம் கொள்ளை; கமிஷனுக்கு ஆசைப்பட்டு வந்தவரிடம் துணிகரம்

திண்டுக்கல் அருகே திருப்பூர் தொழில் அதிபரிடம் கத்திமுனையில் ரூ.90 லட்சத்தை 9 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷனுக்கு ஆசைப்பட்டு வந்தவரிடம் இந்த துணிகர சம்பவம் அரங்கேறியது.

Update: 2023-06-27 21:00 GMT

திண்டுக்கல் அருகே திருப்பூர் தொழில் அதிபரிடம் கத்திமுனையில் ரூ.90 லட்சத்தை 9 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷனுக்கு ஆசைப்பட்டு வந்தவரிடம் இந்த துணிகர சம்பவம் அரங்கேறியது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ஒரு அறிவிப்ைப வெளியிட்டது. அதில், இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்படும் என்றும், பொதுமக்கள் தங்களது கையிருப்பில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.

அதிலும், சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும். இதனால் அதிக எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் நபர்கள், அவற்றை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் வேறு சிலரிடம் கொடுத்து வங்கிகளில் மாற்றி வருகின்றனர். அவ்வாறு மாற்றும் போது சிலர் மோசடி பேர்வழிகளிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே ஒரு தொழில் அதிபர், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ரூ.10 லட்சம் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ரூ.90 லட்சத்தை மோசடி கும்பலிடம் பறிகொடுத்துள்ளார். அதுகுறித்த விவரம் வருமாறு:-

தொழில் அதிபர்

திருப்பூரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 52). ெதாழில் அதிபரான இவர், திருப்பூரில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது நண்பர்கள் கரூர் ஆண்டாங்கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகர், குணசேகரன். இவர்கள் 2 பேரும் ஷாஜகானை தொடர்பு கொண்டு, கரூரை சேர்ந்த சக்திவேல் (55) என்பவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.1 கோடி வைத்துள்ளதாகவும், அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொடுக்க வேண்டும் என்றும், அதன்மூலம் ரூ.10 லட்சம் கமிஷன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஷாஜகானிடம் சக்திவேல் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே புதுக்கோட்டை, கொண்டமநாயக்கனூருக்கு வருமாறும், அங்கு பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

ரூ.90 லட்சம் கொள்ளை

பின்னர் ஷாஜகான் கமிஷன் தொகை ரூ.10 லட்சம் போக, தன்னிடம் உள்ள ரூ.90 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை சூட்கேஸ் பெட்டியில் எடுத்துக்கொண்டு திருப்பூரில் இருந்து எரியோடு அருகே உள்ள கொண்டமநாயக்கனூருக்கு நேற்று முன்தினம் காரில் வந்தார். தன்னுடன் ராஜசேகர், குணசேகரன் ஆகியோரையும் அழைத்து வந்திருந்தார்.

அப்போது சக்திவேல், ஷாஜகானை செல்போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தனது தோட்டத்துக்கு வருமாறு கூறினார். அதன்படி, அவரும் காரில் அந்த தோட்டத்துக்கு சென்றார். அங்கு மற்றொரு காருடன் சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் என 9 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது.

பின்னர் அந்த கும்பலிடம் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்த ரூ.90 லட்சத்தை ஷாஜகான் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள், ஷாஜகானுக்கு பதிலுக்கு பணத்தை கொடுக்கவில்லை. மாறாக அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி ஷாஜகான் மற்றும் அவருடன் வந்த ராஜசேகர், குணசேகரன் ஆகியோரை மிரட்டினர். அத்துடன் அவர்களிடம் இருந்து கார் மற்றும் செல்போன்களையும் பறித்தனர். அதன்பிறகு ஓடிவிடுங்கள், இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் என்று கூறி அந்த கும்பல் அவர்களை விரட்டியது. இதனால் தப்பித்தோம், பிழைத்தோம் என அங்கிருந்து ஷாஜகான் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பினர்.

போலீசில் புகார்

சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள், கொள்ளையடித்த பணத்தையும், காரையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர். செல்லும் வழியில் எரியோடு அருகே புளியம்பட்டி-கூம்பூர் சாலையில் புதுக்கோட்டை பகுதியில் ஷாஜகானிடம் இருந்து பறித்த காரை நிறுத்திவிட்டு, தாங்கள் ஏற்கனவே வந்த மற்றொரு காரில் தப்பிச்சென்றனர்.

இதற்கிடையே மோசடி கும்பலிடம் இருந்து தப்பிய ஷாஜகான் உள்பட 3 பேரும், நடந்த சம்பவம் குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.90 லட்சம் மற்றும் காரை பறித்துச்சென்ற சக்திவேல் உள்பட 9 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் எரியோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும், அதேபோல் அந்த கும்பல் பயன்படுத்திய செல்போன் சிக்னல் எங்குள்ளது என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஒவ்வொரு கிராமமாக கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, புதுக்கோட்டை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஷாஜகானின் காரை போலீசார் கைப்பற்றினர்.

பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி ஆகியோர் நேற்று எரியோடு போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து பணத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் ஷாஜகான் மற்றும் ராஜசேகர், குணசேகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சக்திவேல் உள்பட 9 பேர் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற ரூ.10 லட்சம் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தொழில் அதிபர் ரூ.90 லட்சத்தை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்