அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 6½ பவுன் நகை கொள்ளை

Update: 2023-06-02 20:09 GMT

அயோத்தியாப்பட்டணம்:-

அயோத்தியாப்பட்டணம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 6½ பவுன் நகை கொள்ளை போனது. ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

பள்ளி ஆசிரியர்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கோ.மு.நகர் பகுதியை சேர்ந்த மணி மகன் ரவீந்திரன் (வயது 42). இவர், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சிவசங்கரி. பெரியகவுண்டாபுரம் அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் குடும்பத்துடன் திருப்பத்தூர் பகுதியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். நேற்று காலை 6 மணி அளவில் ரவீந்திரன் வீடு திறந்து கிடப்பதை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்தனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. உடனே ரவீந்திரனை தொடர்பு கொண்டு வீடு திறந்து கிடக்கும் விவரத்தை கூறினர்.

6½ பவுன் கொள்ளை

உடனே ஊருக்கு வந்த ரவீந்திரன் வீட்டுக்கு சென்றார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் என 6½ பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.

இ,துதொடர்பாக காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

பரபரப்பு

ஆசிரியர் குடும்பம் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். எனவே இந்த கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர் நபர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

பழைய கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்