கடலூர் அருகே பரபரப்புஆஞ்சநேயர் கோவிலில் ரூ.1½ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கடலூர் அருகே ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-05 18:45 GMT


நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த எஸ்.குமராபுரத்தில் பிரசித்தி பெற்ற 41 அடி உயர காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜை முடிந்த பின்னர், பூசாரி இரவில் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை கோவிலுக்கு பக்தர்கள் வந்த போது, கோவில் வளாகத்தில் இருந்த சாமி அறை மற்றும் மற்றொரு அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நகை, பணம் கொள்ளை

தொடர்ந்து உள்ளே சென்று பார்க்கையில், அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதுபற்றி பக்தர்கள் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் ஒரு கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் மற்றும் சாமி நெற்றியில் இருந்த 1 ½ பவுன் தங்க நகை மற்றும் பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 ½ லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

4-வது முறையாக...

தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் போலீஸ் மோப்பநாய் கோவிலுக்கு வரவழைத்து மோப்பம் பிடித்து ,அந்த பகுதியில் உள்ள சுடுகாடு வரை ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த கோவிலில் ஏற்கனவே ஒரு முறை ஆஞ்சநேயரிடம் இருந்த வெள்ளி பூணூலை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். அதன்பின்னர் 2 முறை திருட்டு முயற்சி நடந்து வந்த நிலையில், தற்போது நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்