கணவன்-மனைவியை கட்டிப்போட்டு கொள்ளை: உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது

வில்லிவாக்கத்தில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் உறவுக்கார பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-24 22:24 GMT

செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சோழன்(வயது 66). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி வனஜா(60). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் இவர்கள் மட்டும் தனியாக இந்த வீட்டில் வசித்து வருகிறார்கள்,.

கடந்த 22-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் சோழன், வனஜா இருவரையும் கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 70 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றது. இதுபற்றி வில்லிவாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

3 பேர் கைது

இந்த கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக கொரட்டூர் கிரிஜா நகரை சேர்ந்த ராதா(47), வில்லிவாக்கம் சிட்கோ நகர் 2-வது தெருவைச் சேர்ந்த ராமர்(52) மற்றும் சென்னை அண்ணாநகர் மேற்கு முகப்பேரை சேர்ந்த முகமது பக்ரூதீன்(42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கைதான ராதாவும், ராமரும் சோழனின் நெருங்கிய உறவினர்கள் ஆவர். சோழன் வீட்டில் அதிகளவில் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த இவர்கள் வயதான காலத்தில் தனியாக வசிக்கும் சோழன் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். இதற்காக ராதா, தான் வேலை செய்து வந்த தையல்கடைக்காரர் முகமது பக்ரூதீன் உள்பட மேலும் சிலருடன் சேர்ந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரிந்தது.

கைதான 3 பேரிடம் இருந்தும் 70 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்