கண்காணிப்பு கேமராவை உடைத்த கொள்ளையர்கள்

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைக்க முடியாத கொள்ளையர்கள் ஆத்திரத்தால் கண்காணிப்பு கேமராவை உடைத்தனர். நைட்டி மற்றும் டவுசர் அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-01-05 19:55 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைக்க முடியாத கொள்ளையர்கள் ஆத்திரத்தால் கண்காணிப்பு கேமராவை உடைத்தனர். நைட்டி மற்றும் டவுசர் அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கண்காணிப்பு கேமரா உடைப்பு

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ரியாஸ் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு பூட்டை பூட்டினார். பின்னர் வீட்டின் மாடி பகுதிக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் உறங்கினார்.பின்னர் நேற்று காலை மாடியில் இருந்து இறங்கி வீட்டின் வாசலுக்கு வந்த போது வாசலில் இருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் பூட்டும் உடைக்க முயற்சி நடந்திருப்பது தெரிய வந்தது.

நைட்டி, டவுசர் கொள்ளையர்கள்

இதையடுத்து சின்னதுரை வீட்டில் மற்ற கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது நள்ளிரவில் நைட்டி அணிந்த ஒரு நபரும், அரைக்கால் டவுசர் அணிந்த மற்றொரு நபரும், வீட்டின் கதவின் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், பூட்டை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை.இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தெறிந்தனர். பின்னர் அந்த கொள்ளையர்கள் அங்கிருந்து சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இது குறித்து சின்னதுரை, தமிழ் பல்கலைக்கழக போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்