போலீஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற கொள்ளையன் கைது

கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் பிரபல கொள்ளையன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-10 21:39 GMT

கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் பிரபல கொள்ளையன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல கொள்ளையன்

கன்னியாகுமரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி செல்வம் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் மதியம் கொட்டாரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 24) என்பதும், ஏற்கனவே இவர் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

போலீஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி

இதையடுத்து கழிவறை செல்ல வேண்டும் என கண்ணன் போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் கழிவறை அருகே சென்ற கண்ணன் அங்கு பழைய பொருட்கள் கொண்ட பெட்டியில் இருந்த ஒரு சிறிய கத்தியை எடுத்து திடீரென கை, வயிறு, கழுத்து ஆகிய இடங்களில் கிழித்துக் கொண்டு போலீசாரை மிரட்ட தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் இருந்து கத்தியை பிடுங்கி உள்ள னர். பின்னர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

பின்னர் சிகிச்சைக்கு பிறகு மாலையில் மருத்துவமனையில் இருந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார்.

மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், குமரி மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களில் துப்பு துலக்க பழைய திருட்டு வழக்குகளில் தொடர்பு உடையவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சந்தேகத்துக் கிடமான வகையில் நின்ற கண்ணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினோம். திருட்டு வழக்குகள் கண்ணன் மீது இருந்ததால் அவரது கைரேகையை பதிவு செய்து விட்டு விசாரணைக்கு பின் அனுப்பி விடுவதாக கூறினோம். ஆனால் அவர் திடீரென தற்கொலைக்கு முயன்றார். ஏற்கனவே அவர் மீது தக்கலை, வெள்ளிச்சந்தை, கருங்கல், கோட்டார். இரணியல், குளச்சல், ஆரல்வாய் மொழி உள்ளிட்ட போலீஸ் நிலைய பகுதிகளில் திருட்டு உள்பட 15 வழக்குகள் உள்ளன என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்