தண்டையார்பேட்டையில் ரவுடி கத்தியால் குத்திக்கொலை

மதுபோதை தகராறில் ரவுடி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்களான 2 சிறார்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-19 21:51 GMT

புதுவண்ணாரப்பேட்டை,

சென்னை எண்ணூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய் என்ற பம்ப் அஜய் (வயது 23). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை, கொள்ளை மற்றும் கொலை முயற்சி உள்பட 15 வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் நள்ளிரவு அஜய், தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த அஜய், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார். அப்போது அவரிடம் இருந்து கத்தியை பறித்த நண்பர்கள், அவரை சரமாரியாக குத்தினர். இதில் படுகாயமடைந்த அஜய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

5 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் கொலையான அஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக அஜய்யுடன் மதுகுடித்த தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜீவா (21), அன்பரசன் என்ற இன்பா (25), விக்கி என்ற சொல்யூஷன் விக்கி (28) மற்றும் 2 சிறார்கள் என 5 பேரை கைது செய்தனர்.

குப்பை தொட்டியில்...

விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரவுடி அஜய், நண்பர்களுடன் மதுகுடிக்க வந்தபோது தனது மகள் உடைகளை ஒரு பையில் வைத்து கொண்டு வந்துள்ளார். மதுபோதையில் அந்த பையை நண்பர்கள் அருகில் உள்ள குப்பை தொட்டியில் மறைத்து வைத்து விளையாட்டு காட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த அஜய், "என் மகள் சட்டையை எப்படி குப்பை தொட்டியில் போடலாம்?" என தகராறு செய்து நண்பர்களை தாக்கியதோடு கத்தியை காட்டி குத்தி விடுவேன் என்று மிரட்டினார். உடனே நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து அவரிடம் இருந்த கத்தியை பறித்து அஜய்யை குத்திக் கொலை செய்ததும் தெரியவந்தது.

மதுபோதை தகராறில் நண்பர்களே ரவுடியை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்