பள்ளிபாளையத்தில் மழைக்காலங்களில் வாய்க்காலாக மாறும் சாலைகள்

பள்ளிபாளையத்தில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் வாய்க்காலாக மாறும் சாலைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-11-24 18:45 GMT

பள்ளிபாளையம்

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

பள்ளிபாளையம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு வார்டிலும் சாக்கடை கழிவுநீர் செல்ல வசதியாக கால்வாய் கட்டப்பட்டு உள்ளன. மழைக்காலங்களில் மழைநீர் சாக்கடையில் கலந்து காவிரி ஆற்றுக்கு சென்று கலக்கிறது. பஸ் நிலைய சாலையிலும், மேலும் பல இடங்களிலும் சாலையோர பகுதிகளில் உள்ள சாக்கடைகள் மீது பிளாட்பாரம் போட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. மேலும் சாக்கடை கால்வாய்கள் பல இடங்களில் தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது.

இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சாக்கடை கால்வாய் வழியாக செல்ல முடியாமல் சாலையில் செல்கிறது. மேலும் கடைகளில் சேரும் குப்பைகள், ஓட்டல் கழிவு பொருட்கள் சில இடங்களில் சாக்கடைகளில் கொட்டப்பட்டு சாக்கடைகள் நிரம்பி உள்ளன. இதனால் கழிவு நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

சாலையில் வழிந்தோடும் தண்ணீர்

கனமழை பெய்யும் காலங்களில் வாய்க்கால்கள் நிரம்பி, மழைநீர் சாக்கடையில் செல்லாமல் சாலையில் செல்கிறது. கடந்த மாதம் பெய்த கனமழைக்கு முழங்கால் அளவுக்கு தண்ணீர் பஸ் நிலைய 4 ரோட்டில் சென்றது. இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். மதியம் வரை நீர் வடியாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகப்பெரிய இடையூறாக இருந்தது.

நகராட்சி ஊழியர்கள் பல இடங்களில் சாக்கடை கால்வாயை தூர்வாரினாலும், சில இடங்களில் சாக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் தூர்வார முடியாமல் உள்ளது. சில இடங்களில் ஓடை இருந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டு உள்ளன. இதனால் அதன் வழியே சென்று கொண்டிருந்த சாக்கடை நீரும் செல்ல முடியாமல் சாலைக்கு வருகிறது.

எனவே சாக்கடை கால்வாய் மற்றும் ஓடையின் மீதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை அகற்றினால், மழைநீர் சாக்கடை வழியே செல்ல வசதியாக இருக்கும். அதனை நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

இது குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் சபரிநாதன்:-

பள்ளிபாளையம் பஸ் நிலைய பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. மேலும் தண்ணீர் செல்லும் வாய்க்கால் மீது ஆக்கிரமிப்பு செய்த காரணத்தினால் நீர் செல்வதற்கு வழியின்றி சாலைகளில் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நீர் நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் சிலர் சாக்கடை கால்வாயின் மேல் பிளாட்பாரம் அமைத்து, வியாபாரம் நடத்தி வருகிறார்கள். எனவே அதில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இதில் கவனம் மேற்கொள்ள வேண்டும். நகராட்சி அதிகாரிகள் பஸ் நிலைய சாலையில் உள்ள சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வாரி, சுத்தம் செய்து ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

போக்குவரத்துக்கு இடையூறு

சமூக ஆர்வலர் ரமேஷ்குமார்:-

பள்ளிபாளையம் பஸ் நிலைய சாலையிலும், சங்ககிரி சாலையிலும் மழைக்காலங்களில் மழைநீர் சாக்கடையில் நிரம்பி சாலையில் வழிந்தோடுவதை பார்க்க முடிகிறது. கடந்த மாதம் முழங்கால் அளவுக்கு சாலையில் தண்ணீர் சென்றதால் சிறு வியாபாரிகள் தள்ளுவண்டியில் சென்று வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்தது. எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்