மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க வேண்டும்
வால்பாறையில் மலை கிராமங்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
வால்பாறை
வால்பாறையில் மலை கிராமங்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.
நகராட்சி கூட்டம்
வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலம் முன்னிலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு:-
செல்வக்குமார் (வார்டு-1):- மலைவாழ் கிராம மக்கள் குடியிருப்புகளுக்கு குடிதண்ணீர், சாலை மற்றும் சோலார் மின் விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும்.
கனகமணி (வார்டு-2):- சத்துணவு மையம் பராமரிப்பு செய்து தர வேண்டும். தலநார் பகுதியில் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்.
வீரமணி (வார்டு-3):- பழுதடைந்த சமுதாய கூடத்தை சீரமைத்து ரேஷன் கடையாக மாற்ற வேண்டும், பாறைமேட்டில் குடிதண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கூழாங்கல் ஆற்று பகுதியில் கழிப்பிடமும், உடை மாற்றும் அறையும் அமைத்து தர வேண்டும்.
சாலை வசதி
சத்தியவாணிமுத்து (வார்டு-6):- சத்துணவு மையத்தை பராமரித்து தர வேண்டும்.
கலாராணி (வார்டு-7):- முருகாளி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டவேண்டும். சேக்கல்முடி பகுதியில் பொது கழிப்பிடம் கட்டித்தர வேண்டும். மலைவாழ் கிராமத்துக்கு சாலை வசதி செய்துதர வேண்டும்.
இந்துமதி (வார்டு-8):- சோலையாறு அணை பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
மகுடீஸ்வரன் (வார்டு-9):- பழுதடைந்த நிழற்குடைகளை பராமரித்து தர வேண்டும்.
ராஜேஸ்வரி (வார்டு-13):- வெள்ளமலை எஸ்டேட் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சமலை எஸ்டேட் சத்துணவு மையத்தை சீரமைத்துதர வேண்டும்.
கீதாலட்சுமி (வார்டு-16):- அனைத்து பகுதியிலும் தெருவிளக்கு வசதி செய்துதர வேண்டும்.
தெரு விளக்குகள்
மணிகண்டன் (வார்டு-17):- முடீஸ் பகுதியில் எஸ்டேட் நிர்வாகம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வழங்கப்பட்டுள்ள இடத்தில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
ஜெயந்தி (வார்டு-18):- கழிப்பிடம், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.
பால்சாமி (வார்டு-19):- பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மலைவாழ் கிராம மக்களுக்கு சோலார் தெரு விளக்கு அமைத்து தர வேண்டும். பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.
மாரியம்மாள் (வார்டு-20):- பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
உமாமகேஸ்வரி (வார்டு-21):- உபாசி பகுதி சாலையை சீரமைக்க வேண்டும். குடிதண்ணீர் தொட்டியை பராமரிக்க வேண்டும்.
தீர்மானம்
செந்தில்குமார் (துணைத்தலைவர்):- நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்புகள் பழுதடைந்து உள்ளது. இதனை பராமரிக்க வேண்டும்.
அழகுசுந்தரவள்ளி (தலைவர்):- கவுன்சிலர்களின் அனைத்து விவாதங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்.
கூட்டத்தில் சமுதாய சமையல் கூடம் கட்டும் பணிகள், பள்ளிக்கூடங்களுக்கு சாலை வசதிகள் செய்து கொடுக்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், கழிப்பிட பணிகள் மேற்கொள்ளவும், சத்துணவு மையங்கள் பராமரிப்பு செய்யவும், முடீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோரத்தில் மண் நிரப்புவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில், பணியிடமாறுதல் பெற்று செல்லும் நகராட்சி ஆணையாளர் பாலுவுக்கு வழியனுப்பு விழா நடந்தது. நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் ஆணையாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.