பரமத்திவேலூர் அருகே ரேஷன் கடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-12-12 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே ரேஷன் கடை அமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ரேஷன் கடை

பரமத்திவேலூர் அருகே உள்ள காமாட்சி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கடைக்கு 2 கிலோ மீட்டர் தூரம் சென்று பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது. இதனால் முதியவர்கள் ரேஷன் கடைக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதையொட்டி காமாட்சி நகர் பகுதியில் ரேஷன் கடை கட்டுவதற்காக அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

அந்த இடத்தில் ரேஷன் கடை கட்டுவதற்காக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வருவாய் துறையினரிடம் மனு அளித்தனர். ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து வருவாய் துறையினரிடம் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்டு உடனடியாக ரேஷன் கடை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற பரமத்திவேலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை அகற்றி ரேஷன் கடை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்