மாணவ, மாணவிகள் சாலைமறியல்

கூடுதல் பஸ் வசதி செய்து தரக்கோரி மாணவ, மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-08 18:45 GMT

காரைக்குடி

கூடுதல் பஸ் வசதி செய்து தரக்கோரி மாணவ, மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஸ் வசதி

காரைக்குடி அடுத்த சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஜெயங்கொண்டானில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் தினமும் புதுவயல் மற்றும் காரைக்குடிக்கு வந்து செல்கின்றனர். காரைக்குடியில் இருந்து ஜெயங்கொண்டான் வரை சென்று வந்த பஸ் தற்போது ஏம்பல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏம்பலிருந்து வரும்போதே பஸ்சில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்த பஸ் ஜெயங்கொண்டானில் நிற்பதில்லை எனக்கூறப்படுகிறது. அப்படி நின்றாலும் பஸ்சில் மாணவ, மாணவிகளால் ஏற முடிவதில்லை.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவ, மாணவிகள் தங்களுக்கு பஸ் வசதி செய்து தரக்கோரி பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.. அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பஸ் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர்.

சாலை மறியல்

ஆனால் இதுவரை கூடுதல் பஸ் வசதி செய்து தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் மீண்டும் நேற்று ஜெயங்கொண்டான் வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாக்கோட்டை போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள் அங்கு சென்று மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி பஸ் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். மேலும் இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்