குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கபிலர்மலை அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாைல மறியல் செய்தனா்.
பரமத்திவேலூர்
சுகாதாரமான குடிநீர்
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசோளிபாளையத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது குடிநீர் குழாய் உடைந்ததால் கடந்த சில நாட்களாக பெரியசோளிபாளையம் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது. பின்னர் குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் சேறும், சகதியும் கலந்து குடிநீர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சுத்தமான குடிநீரை பெரியசோளிபாளயம் ஊராட்சி நிர்வாகம் வழங்கக்கோரி கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் முஸ்டபரப்பு பகுதியில் சேறும் சகதியும் கலந்த தண்ணீர் குடத்துடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் மற்றும் பெரியசோளிபாளயம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
சுகாதாரமான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். தொடந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.