திருச்சுழி,
திருச்சுழி அருகே உள்ள பரளச்சி வாகைக்குளம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், நாம் தமிழர் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். நேற்று பரளச்சி வாகைக்குளம் பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்போவதாக தகவல் அறிந்த பொதுமக்கள், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.