திருச்சுழி,
திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு தொப்பலாக்கரை கிராம தெருக்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மர்ம நபர்கள் சிலர் சுவரொட்டிகளை சேதப்படுத்தியும், கிழித்தும் உள்ளனர். இதனை கண்டித்து ஒரு பிரிவினர் செட்டிக்குளம் விலக்கு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எம்.ரெட்டியபட்டி போலீசார் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.